Friday, 17 October 2014

உளச்சிதறல் - சிறுகதை

தன்னிடமுள்ள கண்ணீரனைத்தையும் அழுது தீர்த்துவிடும் மனநிலையில் நிலைகுலைந்து போயிருந்தாள் ஆனந்தி. தனக்கான இந்த துக்கத்தை தன் கணவரிடமிருந்தே பெறுவாள் என கனவிலும் அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. தன் மீல் அதிகம் பாசம் வைத்திருந்த தனது தந்தையின் திடீர் இழப்பு பெரிய இடியாக இறங்கியதை தாங்க முடியாதவள் அதன் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் அவரது கடைசி முகத்தை காண முடியாதது போனது பேரிடியாக இருந்தது ஆனந்திக்கு. 

அப்பாவை நினைக்க நினைக்க அளவுக்குமீறி அழுமை பீறிட்டது. தன்னுடைய பாசம் ஒரு மடங்கு என்றால் தன் மேல் அப்பா வைத்திருக்கும் பாசம் நூறு மடங்கு இருக்கும். சிறு வயதிலிருந்து தனக்கும் தந்தைக்குமிடையேயான காட்சிகள் கண்ணில் மின்னலென வந்து வந்து சென்றன. அதிர்ஷ்டத்தில் நம்பிக்கையில்லாத அப்பா, தான் பிறந்தவுடன் தான் தனக்கான எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என நினைத்தாரம். அந்த எண்ணத்தினால் மட்டும் அவர் எடுத்த முயற்சிகள் அவருக்கு வெற்றியையும் வசதியையும் அளித்தது. தலைப்பிள்ளை பொட்டையாய்ப் பிறந்துவிட்டதே என பிறந்தவுடன் அப்பத்தா சொன்ன ஒரு சொல்லுக்காக தன்னுடைய அம்மாவுடன் பத்து வருஷம் வைராக்கியத்தை விட்டுக்கொடுக்காமல் பேசாமலிருந்ததார் அப்பா. பிறந்த நாள் முதல் தன் மீது தன் அப்பா வைத்திருந்த பாசத்தை அம்மா சிலாகித்துச் சொல்லுவைதைக் கேட்டு கேட்டே தனது தந்தை மீதான பாசமும், மரியாதையும் தன்னிடம் அதிகாமனதை உணர்வுபூர்வமாய் உணர்ந்திருந்தாள் ஆனந்தி. 
தான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றே தன்னை வருத்தி பெரும் கஷ்டப்பட்டு பொருளாதாரத்தை உயர்த்தப் பாடுபட்டார். சிறுவயது முதல், ஆரோக்கியம், கல்வி, தனக்கான சுதந்திரம், திருமணம் என தனது ஒவ்வொரு நிலையிலும் தனது தந்தை தவிர்த்த நிகழ்வுகளை தன்னால் காணவே முடியவில்லை. ஒரு தந்தை என இல்லாமல் ஒரு நண்பர் போல் “வாடா ஆனந்தி, எப்படிடா இருக்கே.. என அன்புடன் கொஞ்சும் அப்பா இப்போது இல்லை, நான் பார்க்கவும் இல்லை எனும் போது ஆனந்தியால் தாங்கமுடியவில்லை. 
இவ்வளவு பாசம் வைத்திருந்த அப்பாவின் முகத்தை காணக் குடுத்து வைக்கலியேடி ஆனந்தி.. எனக் கேட்பது போல் இருந்தது அம்மாவின் பார்வை. இரண்டு மாதத்திற்கு முன்பு தான் வந்து பார்த்துச் சென்றிருந்தாலும் அவரின் கடைசி முகத்தை காணதது பெரும் வெற்றிடத்தை மனதில் உருவாக்கியது ஆனந்திக்கு. அப்பா இறந்து விட்டார் என நேற்று இரவே கோலாலம்பூரில் இருந்த கணவனுக்கு தகவல் வந்திருக்கிறது. தகவல் கிடைத்தவுடன் தனக்கு சொல்லியிருந்தால் நான் சீட்டு வாங்கி தனியாக பிளைட்டில் வந்து இறங்கியிருப்பேன், அப்பாவின் முகத்தைப் பார்த்தும் இருப்பேன். ஆனால் கோலலம்பூரிலிருந்து கிளம்பி சிங்கப்பூர் வந்து அதன் பின் சீட்டு வாங்கி இங்கே வருவதற்குள் எல்லாம் முடிந்து விட்டது. அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லையென்று கூறி தன்னை மெதுவாக கூட்டிக்கொண்டு வந்த தனது கணவனின் முகத்தைப் பார்க்கவே அருவெருப்பாயிருந்தது.
திருமணமான புதிதில் வாக்குவாதத்தில் ஏற்பட்ட கோபத்தில் அடித்துவிட்ட தன் கணவன் சிவராமை மருமகனென்ற மரியாதையில்லாமல் திட்டிவிட்டார் அப்பா. அந்தக் கோபத்தைத் தான் இப்போது என் மூலம் பழிதீர்த்துக் கொள்கிறாரோ எனவும் மனம் அவளை கேள்விக் கணைகளால் துளைத்தது. ஹதராபாத்தில் சொற்ப வருமானத்தில் குடித்தனம் நடத்தும் தனது தங்கை கூட இருபது மணி நேரம் ரயிலில் பயணம் செய்து தனது தந்தையின் இறுதிச் சடங்கைப் பார்த்துவிட்டாள் ஆனால் என்னால் அப்பாவைப் பார்க்க முடியவில்லையே என குற்ற உணர்வில் குறுகினாள். இருந்தாலும் உம்புருஷனுக்கு இம்புட்டு ஆகாதடியம்மா... இப்படியா அப்பனை தூக்கினதுக்கப்புறம் கூட்டிட்டு வர்றது... சாவு எல்லாருக்கும் தான் வரப்போது.. நாளைக்கு இவனுக்கு என்னா நடக்கும்னு பார்ப்போம்.. என தன்கண் முன்னே சபித்துக் கொட்டினார்கள் தனது சொந்தங்கள்.
தனது நாத்தனார் சித்ரா மட்டும் அருகில் வந்து மதினி தப்பா நினைச்சுக்காதீங்க... உங்களுக்கு பச்ச உடம்புன்னுதான் அண்ணன் சொல்லலியாம்... அழுதுக்கிட்டே சாப்பிடாம்ம வருவீங்கன்னு சொல்லாம வந்திருக்கு..னு சொன்னாள். இந்த உப்புச் சப்பு காரணங்களை எல்லாம் தன்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. எனக்கு ஏன் இந்தச் சோதனையக் கொடுத்தே என பெரிதும் வணங்கும் தெய்வமான வண்டியூர் மாரியம்மனை வேண்டிக்கொண்டாள். பிள்ளை பெற்று எட்டு மாதமாயிடுச்சு இதிலென்ன பச்ச உடம்புன்னுகிட்டு..... பச்ச உடம்பு என்பதற்காக அழமாலா இருந்துவிடப்போகிறேன். தன்னை சரியான நேரத்துக்கு கூப்பிட்டு வரவில்லையென தனது தம்பி கிருஷணனும் தன்னை கணவன் மேல் கோபத்தில் இருப்பதை உணராமல் இல்லை. அப்பாவின் கடைசி முகத்தை பார்க்கவில்லை என்பதைத் தவிர அப்பாவின் இறுதிச் சடங்கு சிறப்பாக இருந்ததை ஊரிலுள்ள கிழடு, கிழவிகள் எல்லாம் சிலாகித்து சொல்லின. சொல்லிய அனைத்து வாய்களுக் தனது கணவனை நாலு கேள்விகள், திட்டி, சிறுமைப்படுத்தி சபிப்பதை மறக்காமல் செய்தனர். அம்மா, தங்கை, தம்பி, ஊர்மக்கள் என யார் சொன்னாலும் அவருக்கு பதில் சொல்ல முடியாத, நியாயபடுத்த ஒன்றுமேயின்றி நிராயுதபாணியாக நின்றாள் ஆனந்தி. 
எல்லாச் சடங்குகளும், காரியமும் எல்லாம் முடிந்து சிங்கப்பூருக்குச் செல்ல காரில் மதுரை விமான நிலைம் செல்லும் வழியில் வண்டியூர் மாரியம்மன் கோயில் திருப்பத்தில் ஆனந்தி மனதில் “மாரியம்மா.. எம் புருஷன் தெரிந்து செய்தாரோ.. இல்லை தெரியாமல் செய்தாரோ.. மன்னிச்சுக்கோ... எம் புருஷன் மேல் சபிச்சங்கவ வாக்கு எதுவும் பழிக்காம நீதாம காப்பததனும்” என்று வேண்டிக்கொண்டாள்.