Sunday, 13 May 2018

புத்திசாலி அம்மா..!

ஓர் ஊரில் ஒரு பெண் தன் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தாள். அவர் கணவன் வெளியூரில் வேலை செய்து கொண்டிருந்தார். பல நாட்களுக்குப் பிறகு கணவனிடமிருந்து, நீயும் குழந்தைகளும் இங்கு வந்து சேருங்கள் என்ற கடிதம் வந்தது. உடனே, தன் குழந்தைகளுடன் மாட்டு வண்டியில் ஊருக்கு புறப்பட்டாள். போகும் வழியில் அடர்ந்த காட்டு வழியாக வண்டி சென்றது. ஆபத்து வரப்போவதை அறிந்த மாடுகள் கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டது.
நடுக்காட்டில் குழந்தைகளுடன் சிக்கிக்கொண்ட அவர் இங்கே புலி இருக்குமே என்று நடுங்கினாள். அருகிலிருந்த மரத்தின் கிளையில் குழந்தைகளுடன் அமர்ந்து கொண்டாள். சிறிது நேரத்தில் அங்கு புலி ஒன்று வருவதை பார்த்ததும், அதனிடமிருந்து தப்பிப்பதற்காக இரண்டு குழந்தைகளின் தொடையிலும் அழுத்திக் கிள்ளி இருவரையும் அழ வைத்தாள். பின் குழந்தைகளே! அழாதீர்கள், இப்படி நீங்கள் அடம் பிடித்தால் நான் என்ன செய்வேன்.

நீங்கள் உண்பதற்கு ஆளுக்கொரு புலியை பிடித்து தருகிறேன். இந்தக் காட்டில் புலி இருக்கும். இன்று மாலைக்குள் நீங்கள் சாப்பிட ஆளுக்கொரு புலி தருகிறேன். அதுவரை பொறுமையாக இருங்கள் என்று உரத்த குரலில் சொன்னாள். இதைக்கேட்ட புலி நடுங்கி, ஒரே பாய்ச்சலாக அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. பயந்து ஓடும் புலியை வழியில் பார்த்த நரி காட்டுக்கு அரசே! ஏன் இப்படி ஓடுகிறீர்கள்? என்ன நடந்தது என்று கேட்டது.

நரியே! நம் காட்டுக்கு ஒரு அரக்கி வந்துள்ளாள். இரண்டு குழந்தைகள் அவளிடம் உள்ளன. அந்தக் குழந்தைகள் உண்ண நாள்தோறும் ஆளுக்கொரு புலியைத் தருகிறாளாம் அதை கேட்டுத்தான் நான் ஓடிவந்தேன் என்றது. இதைக் கேட்ட நரியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவள் உங்களை ஏமாற்றி இருக்கிறாள். எங்காவது மனிதக் குழந்தைகள் புலியைத் சாப்பிடுமா? வாருங்கள், அவளையும், குழந்தைகளையும் கொன்று சாப்பிடுவோம் என்றது நரி. நான் அங்கு வர மாட்டேன், என்று உறுதியுடன் புலி சொன்னது.

அவள் சாதாரண பெண்தான். நீங்கள் நம்பவில்லை என்றால் உங்கள் வாலையும், என் வாலையும் சேர்த்து முடிச்சுப் போடுவோம். பிறகு இருவரும் அங்கே சென்று பார்ப்போம். நம் இருவர் பசியும் தீர்ந்து விடும், என்றது நரி. நரி முன்னால் நடந்தது. புலி தயங்கித் தயங்கிப் பின்னால் வந்தது. மரத்தில் இருந்த அவள் நரியின் வாலும், புலியின் வாலும் ஒன்றாகக் கட்டிருப்பதை பார்த்து என்ன நடந்திருக்கும் என்பதை உணர்ந்தாள். கோபமான குரலில், நரியே! நான் உன்னிடம் என் குழந்தைகளுக்கு இரண்டு புலிகளை இழுத்து வரச்சொன்னால் நீ ஒரே ஒரு புலியுடன் வருகிறாய். எங்களை ஏமாற்ற நினைக்கிறாயா? புலியுடன் உன்னையும் கொன்று சாப்பிடுகிறேன் என்று கத்தினாள்.

புலி பயந்துபோனது, நரியோ, புலியாரே! அவள் நம்மை ஏமாற்றுவதற்காக இப்படிப் பேசுகிறாள் என்றது. நரியே, என்னை ஏமாற்றி விட்டாயே என்று புலி திட்டியது. அதன்பிறகு வாலில் கட்டப்பட்டு இருந்த நரியை இழுத்துக்கொண்டு ஓடத்தொடங்கியது.

வாலில் கட்டப்பட்டிருந்த நரிக்கு பாறை, மரம், முள்செடி போன்றவற்றில் மோதி படுகாயமானது. புலியோ எதைப் பற்றியும் சிந்திக்காமல் நரியை இழுத்துக்கொண்டு ஓடியது. வழியில் நரியின் வால் அறுந்து மயக்கம் அடைந்து விழுந்தது. பிறகு அந்தப் பெண் தன் குழந்தைகளுடன் பாதுகாப்பாக கணவன் இருக்கும் ஊருக்குச் சென்றாள்.

நீதி : எந்த ஒரு நிலையிலும் தைரியத்தை கைவிடக்கூடாது.

வாழ்க்கைக்கு வழிகாட்டிய பறவை..!

ஒரு கிராமத்தில் ராமு என்ற ஒருவன் இருந்தான். அவனுக்குப் போதுமான அளவு செல்வம் இருந்தது. ஆனால், அவன் மிகவும் சோம்பேறி. கிராமத்தில் உள்ளவர்கள் வேலைக்கு செல்லும்போது இவன் மட்டும் உறங்கிக்கொண்டிருப்பான். 
 
ஒருநாள் மாலை நேரத்தில் அவன் கிராமத்தை சுற்றி வந்த போது, ஒரு சிறிய அழகான பறவையைப் பார்த்தான். தன் வீட்டிற்கு எடுத்துச்சென்று, அதனுடன் விளையாடிப் பொழுதைக் கழிக்கலாம் என்று நினைத்து பறவையை வீட்டிற்கு அழைத்துச் சென்றான். பறவைக்கு உணவை அளித்து, அது உணவு உண்ணும் அழகைக் கண்டு ரசித்தான். சற்று நேரத்தில் இருட்டிவிட்டது. வழக்கம் போல் தூங்கி விட்டான். 
 
பொழுது விடிந்து கண்விழித்துப் பார்த்த அவன் அதிர்ந்து போனான்! அவன் உணவளித்த பறவை சுமார் மூன்றடி உயரம் வளர்ந்திருந்தது. நான் சிறிய பறவையைத்தானே எடுத்து வந்தேன் என்று யோசித்தான். நீ எடுத்து வந்த பறவைதான் நான் இப்போது வளர்ந்துவிட்டேன். எனக்குப் பசிக்கிறது, ஏதாவது சாப்பிடக்கொடு என்றது பறவை. அதற்கு சிறிது தானியங்களைப் போட்டான். பறவை அதை சாப்பிட்டுவிட்டு மீண்டும் பசிக்கிறது என்றது.
 
ராமு தனக்காக இருந்த உணவையும் பறவைக்கு அளித்து விட்டான். ராமுவுக்கு சாப்பிட எதுவும் இல்லாததால் வீட்டைவிட்டு வெளியே சென்றான். பகல் முழுவதும் வெளியில் இருந்து விட்டு இரவு வீடு வந்து பார்த்தான். அந்தப் பறவை மிகப் பெரியதாக வளர்ந்திருந்தது! 
 
ராமுவுக்கு பயமும், அதிர்ச்சியும் ஏற்பட்டது. வெளியே, குளிரில் படுத்து உறங்கினான். பொழுதும் விடிந்தது! ராமு பசியுடன் இருந்தான். அப்போது அவ்வழியே மூட்டையை சுமந்து கொண்டு வந்த ஒரு வண்டியிலிருந்து இறங்கிய பெரியவர் ராமுவைப் பார்த்து, தம்பி மூட்டையை சற்று இறக்குவதற்கு உதவினால், நான் உனக்குப் பணம் தருகிறேன் என்றார். 
 
அதற்கு ராமு எனக்கு உணவு கிடைக்குமா? என்று கேட்டான். வாங்கித் தருகிறேன் என்றார் பெரியவர். பசியோடு இருந்தவனுக்கு அவர் வாங்கித்தந்த உணவு அமிர்தமாக இருந்தது. சாப்பிட்டப்பின் வீட்டுக்குச் சென்றான். ஆனால், பறவையை எப்படியாவது வீட்டை விட்டு துரத்திவிட வேண்டும் என்று நினைத்தான்.
 
வீட்டிற்குச் சென்றதும் பறவை சற்று சிறியதாக மாறியிருந்தது! எப்படி இது என்றான் ராமு. உன் சோம்பல் சற்று குறைந்துவிட்டது அல்லவா? அதனால்தான் என்றது. 
 
மறுநாள் கூலி வேலைக்குச் சென்றான். கிடைத்த கூலியில் வயிறு நிறைய சாப்பிட்டான். பறவைக்கும் உணவு வாங்கிக் கொண்டான். அவனுக்கு சந்தோஷமாக இருந்தது. இனி உழைத்து உண்ண வேண்டும் என்று தீர்மானித்து வீட்டுக்குச் சென்றான்.
 
பறவை முதலில் இருந்தது போலவே மிகவும் சிறியதாக இருந்ததைக் கண்டான். இது எப்படி? என்று பறவையைக் கேட்டான். உன் சோம்பேறித்தனத்தை மாற்றவே நான் அப்படி செய்தேன். நான் வந்த வேலை முடிந்தது என்றது பறவை. 
 
எனக்கு மிகவும் மகிழ்ச்சி இந்த உணவை சாப்பிடு என்றான் ராமு. என் மீது நீ கொண்ட அன்பிற்கு நன்றி. எனக்கு உணவு வேண்டாம். உன் சோம்பல் நீங்கியதே அதுதான் எனக்கு நிம்மதி! என் உணவை நான் தேடிக்கொள்வேன் என்று கூறிவிட்டு வானை நோக்கிப் பறந்தது.
 
அது வானில் ஒரு புள்ளியாய் மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்த ராமுவிற்கு அழுகை வந்தது. இது உலகிற்கு ஞானத்தை ஊட்ட நினைக்கும் பறவை போலிருக்கிறது என்று கண்களைத் துடைத்துக்கொண்டான்.
 
நீதி :
உழைத்து சாப்பிட்டால் தான் வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சி கிடைக்கும்.

பேராசையால் வந்த விபரீதம் .!

பண்ணையார் ஒருவருக்கு அவருடைய ஊரில் இருந்த பெரும் பகுதியான நிலங்கள் சொந்தமாக இருந்தது. அவரிடம் முருகன்; என்ற உழவன் வேலை பார்த்தான். அவனுக்கு சிறிய குடிசையும், கொஞ்ச நிலமும் இருந்தது.
 
பண்ணையாரிடம் முருகன்;, ஐயா! உங்கள் அனைத்து நிலங்களிலும் உழுது விதை நட்டு விட்டார்கள். என் நிலம் மட்டும் காலியாக உள்ளது. என் நிலத்தில் விதைப்பதற்கு சிறிது தானியம் தாருங்கள் என்றான். 
 
அதற்கு அவர் சொந்தமாகப் பயிரிட வேண்டாம், என் நிலத்திலேயே உழுது பயிரிடு. அரை வயிற்றுக் கஞ்சியாவது கிடைக்கும் என்று கோபத்துடன் சொன்னார். சோகத்துடன் வீட்டுக்கு சென்று தன் மனைவியிடம், நமக்கு தானியம் தரவில்லை. நீயும் நம் குழந்தைகளும் எப்போதும் போலப் பட்டினி கிடக்க வேண்டியது தான். இதுதான் நம் தலைவிதி என்று சொல்லி வருத்தப்பட்டான். 
 
அவர்கள் குடிசையில் குருவி ஒன்று கூடு கட்டி நான்கு குஞ்சுகளை பொறித்திருந்தது. திடீரென்று அந்தக் குருவிக்கூட்டுக்குள் ஒரு பாம்பு நுழைந்ததை பார்த்த குருவிக்குஞ்சுகள் கத்தியது. அதைக்கேட்ட முருகன் பாம்பை பிடித்துக் கொல்வதற்குள், அது மூன்று குஞ்சுகளைத் தின்று விட்டது. தரையில் விழுந்த ஒரு குஞ்சு மட்டும் கால் ஒடிந்து இருந்தது. அதை அன்போடு எடுத்து அதற்குக் கட்டுப்போட்டான். அதை மீண்டும் கூட்டில் வைத்து உணவு கொடுத்து நன்கு பார்த்துக்கொண்டான். 
 
அந்தக் குருவியின் கால்கள் சரியானதும், அது பறந்து சென்றது. ஒருசமயம் அவர்கள் வீட்டிற்கு அவன் வளர்த்த குருவி வந்தது. அவன் கையில் 3 விதையை கொடுத்து இதை உன் வீட்டுத் தோட்டத்தில் ஒன்றும், வீட்டின் முன்புறத்தில் ஒரு விதையையும், மற்றொரு விதையை வீட்டின் சன்னல் ஓரத்திலும் நட்டு வை. என் மீது காட்டிய அன்பிற்கு நன்றி என்று சொல்லிவிட்டுப் பறந்தது. குருவி சொன்னபடியே மூன்று விதைகளையும் நட்டான். 
 
மறுநாள் காலையில் அங்கே மூன்று பெரிய பூசணிக்காய்கள் காய்த்தன. பின்பு, அந்த பூசணிக்காயை இரண்டு துண்டாக வெட்டிப்பார்த்தான். அதனுள் இருந்து விதவிதமான உணவுப் பொருள்கள் வந்தன. சுவையான அவற்றை எல்லோரும் மகிழ்ச்சியாக உண்டனர். மீண்டும் அந்தப் பூசணிக்காயை ஒன்று சேர்த்ததும். பழையபடி அது முழுப் பூசணிக்காய் ஆனது.
 
இது மந்திரப் பூசணிக்காய். நமக்கு உணவு வேண்டுமெனில் பிளந்தால் உணவு கிடைக்கும் என்றான். இதேபோல், மீதமுள்ள 2 பூசணிக்காயையும் பிளந்து பார்த்தனர். அதில், ஒன்றில் அழகான ஆடைகள், விலை உயர்ந்த மணிகளும், மற்றொன்றில் பொற்காசுகளும் இருந்தன.
 
அதன் பிறகு முருகன்; குடும்பம் பெரும் வசதியான வாழ்க்கை வாழ்ந்தனர். இதனை அறிந்த பண்ணையார், உழவனிடம் முருகா! உனக்கு எங்கிருந்து இவ்வளவு செல்வம் கிடைத்தது? உண்மையைச் சொல் என்று கேட்டார்.
 
அவனும் நடந்ததை எல்லாம் அப்படியே சொன்னான். அதைக்கேட்ட அவர் வீட்டின் மேல் பகுதியில் குருவிக்கூடு ஒன்றை அவரே செய்தார். ஒரு குருவி வந்து அந்தக் கூட்டில் தங்கி நான்கு குஞ்சுகள் பொறித்தது. பாம்பு வரவே இல்லை. அதனால் அவரே, அந்த குருவிக்கூட்டை கலைத்து மூன்று குஞ்சுகளை கொன்றார். ஒரு குருவியின் காலை உடைத்துக் கீழே எறிந்தார்.
 
பிறகு கால் உடைந்த குருவியிடம் அன்பு காட்டுவது போல் நடித்து வேளை தவறாமல் உணவு அளித்தார். கால் சரியான அந்தக் குருவி கூட்டைவிட்டுப் பறந்து போனது. அவர் குருவி விதை கொடுக்கும் என்று எதிர்பார்த்த போது, குருவி கதவைத் தட்டியது. அவரிடம் மூன்று விதைகளைத் தந்தது. ஒன்றை வீட்டின் பின்புறமும், இரண்டாவதை வீட்டின் முன்புறமும், மூன்றாவதைக் கிணற்றோரமும் நடு என்று சொல்லி விட்டுப் பறந்து சென்றது. மூன்று தானியங்களையும் நட்டார்.
 
மறுநாளே மூன்று பெரிய பூசணிக்காய்கள் காய்த்து இருந்தன. மூன்று பூசணிக்காயையும் வெட்டினார். அதில் ஒன்றில் இருந்து எண்ணற்ற பூச்சிகள் வயலில் விளைந்திருந்த பயிர்களை எல்லாம் ஒரு நொடிக்குள் வீணாக்கியது. பின்பு இரண்டாவதில் இருந்து தீ வெளிப்பட்டு அந்த மாளிகையையும் ஒரு நொடிக்குள் சாம்பல் ஆக்கியது. மூன்றாவதில் பாம்பு, தேள் போன்றவை இருந்தன. இதனால், தனது பேராசை தவறு என உணர்ந்தார்.

பழிச் சொல்

புதுப்பட்டி என்ற ஊரில் கந்தசாமி என்ற ஒருவர் இருந்தார். அவர் ஒரு முறை தேவையில்லாமல் ஒரு கிராமவாசி மீது பழி சொல்லி பஞ்சாயத்தைக் கூட்டினார். பஞ்சாயத்திலும் கிராமவாசிக்குத் தண்டனை கிடைத்தது. பின்பு, வீட்டிற்கு வந்ததும் கந்தசாமியின் மனசாட்சி அவரை உறுத்தியது.
 
கிராமவாசி மீது வீணாக பழி சொன்னதை எண்ணி வருந்தினார். அதனால் தன் பாவத்திற்கு ஏதாவது பிராயச்சித்தம் இருக்கிறதா என்று யோசித்தார்.
 
அவருக்கு என்ன பிராயச்சித்தம் செய்வதென்று புரியவில்லை. எனவே, அந்த ஊரிலிருந்த ஒரு துறவியிடம் சென்று, நான் இந்தக் கிராமத்தில் வசிக்கும் ஒருவர் மீது வீண் பழி சொல்லிவிட்டேன். அது என் மனதை உறுத்துகிறது. அந்தப் பழி சொன்ன பாவத்தில் இருந்து தப்பிக்க எனக்கு ஒரு வழி கூறுங்கள்! என்று கேட்டார்.
 
அதைக்கேட்ட துறவி சிறிதுநேரம் யோசித்துவிட்டு, இன்று இரவு ஐந்து கிலோ இலவம்பஞ்சை எடுத்துக்கொண்டு அந்த கிராமவாசியின் வீட்டின் முன்பு பரப்பிப் போட்டுவிட்டு வந்து விடு!. நாளை வந்து என்னைப் பார்! என்று கூறினார்.
 
கந்தசாமியும் பஞ்சைக் கொண்டு சென்று அந்த கிராமவாசியின் வீட்டின் முன்பு பரப்பி விட்டார். பின் மறுநாள் சென்று துறவியைப் பார்த்து, துறவியாரே! என் பாவம் போய் இருக்குமா? என்று கேட்டார்.
 
உடனே துறவி, கந்தசாமி! நீ இப்போது அந்த கிராமவாசியின் வீட்டிற்குச் சென்று, அவன் வீட்டு முன் நீ நேற்றிரவு பரப்பி வைத்த பஞ்சை மீண்டும் எடுத்துக்கொண்டு வா! என்று கூறினார்.
 
கந்தசாமி மிகுந்த ஆவலுடன் கிராமவாசியின் வீட்டிற்கு சென்றார். ஆனால், அங்கு ஒரு விரல் அளவு பஞ்சு கூட இல்லை. எல்லாம் காற்றில் பறந்து சென்றிருந்தது. அதைக் கண்ட கந்தசாமி திடுக்கிட்டான். மீண்டும் துறவியிடம் ஓடி வந்தான்.
 
துறவியாரே! நேற்றிரவு நான் கிராமவாசி வீட்டின் முன்னால் போட்டுவிட்டு வந்த பஞ்சில் ஒரு துளிப் பஞ்சு கூட இப்போது அங்கு இல்லை. என்ன செய்வது? என்று கேட்டான்.
 
உடனே, துறவி சிரித்துவிட்டு, கந்தசாமி! நீ விரித்துப் போட்டுவிட்டு வந்த பஞ்சை இப்போது மீண்டும் எப்படி அள்ள முடியாதோ, அதேபோல, நீ ஒருவர் மீது கூறிய பழியையும், அதனால் உனக்கு ஏற்பட்ட பாவத்தையும் மாற்ற முடியாது. திரும்பி வர முடியாத பஞ்சைப் போன்றது தான் உன் பழிச் சொற்களும். அவற்றையும் இனித் திருப்பி பெற முடியாது. நீ மனம் திருந்தி இறைவனிடம் உன் தவறுக்காக மன்னிப்பு கேள் என்று கூறினார்.
 
கந்தசாமிக்கு இப்போது உண்மை புரிந்தது. அன்று முதல் மற்றவர்கள் மீது பழி சொல்லும் குணத்தையே விட்டுவிட்டார்.
 
நீதி :
 
பிறர் மீது வீண் பழி சுமத்துவதால் பலன் ஏதும் கிடைக்கப்போவதில்லை.

உழைப்பின் உயர்வு.!

அத்தனூர் என்ற கிராமத்தில் எழிலி என்ற குட்டிப் பெண்ணும், அவளுடைய அம்மாவும் வாழ்ந்து வந்தனர். எழிலி அந்த கிராமத்துப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தாள். எழிலியின் அம்மா விவசாய நிலங்களில் கூலி வேலை செய்து வந்தார். அதில் வரும் வருமானத்தில் தான் இருவரும் அவர்கள் தேவைகளை நிறைவு செய்து கொண்டனர். 

வருமானம் பற்றாக்குறையாக இருந்தாலும், அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். தாயும், மகளும் ஒருவர்மீது ஒருவர் அளவற்ற அன்பு கொண்டிருந்தனர். ஒரு முறை எழிலியின் அம்மா ஒரு வெள்ளி மோதிரத்தை பெட்டியில் வைத்திருந்தார். அது மிகவும் பழையதாகவும், கறுப்பாகவும் இருந்தது.

எழிலி விடுமுறை நாளன்று பெட்டியை சுத்தம் செய்த போது, அந்த மோதிரம் எழிலியின் கண்களில் பட்டதும் அதை எடுத்துத் தன் விரலில் போட்டுக் கொண்டாள். அவளுக்கு அந்த மோதிரம் சற்று பெரியதாக இருந்தது. இருந்தாலும் கழற்ற மனமின்றி நூல் சுற்றிப் போட்டுக் கொண்டாள். 

ஒரு நாள் எழிலி தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த போது விரலில் போட்ட மோதிரம் கறுப்பாகத் தெரிகிறது என்று கிண்டல் செய்தார்கள். அதனால், உடனே எழிலி வீட்டிற்கு வந்து மோதிரத்தை சோப்பும், தண்ணீரும் போட்டு தேய்த்து கழுவினால். அப்போது அந்த மோதிரத்தில் இருந்து ஒரு தேவதை தோன்றியது!

தேவதையைப் பார்த்து முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் சமாளித்துக் கொண்ட எழிலி... நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும்? என்று பணிவுடனும், அன்புடனும் கேட்டாள். நான் இந்த மோதிரத்தின் தேவதை. இந்த மோதிரம் மிகவும் சக்தி வாய்ந்தது.

கேட்டதை எல்லாம் கொடுக்கும். உனக்கு என்ன வேண்டுமோ தயங்காமல் கேள் பெண்ணே! வீடு வேண்டுமா? நிலம், நகைகள், பணம் எது வேண்டும்?... சீக்கிரமாகக் கேள். மோதிரத்தில் இருந்து வெளிவந்தால் யாருக்கேனும் எதையாவது கொடுத்தால்தான் என்னால் தேவதையாக இருக்க முடியும். இல்லாவிட்டால் எனக்கு ராட்சஸ வடிவம் கிடைத்துவிடும் என்று எனக்கு ஒரு சாபம் இருக்கிறது என்றது தேவதை.

உடனே எழிலி அந்த தேவதையிடம், தேவதையே உன் சாபம் பலித்துவிடும் என்று நீ அஞ்சுகிறாய். ஆனால் யாரிடமும், எதையும் இலவசமாக பெறக்கூடாது. உழைத்து வாழ்வதே சிறந்தது என என் தாய் சொல்லி இருக்கிறார். உன்னிடம் இருந்து நான் எதைப் பெற்றாலும் என் தாயின் சினத்திற்கு நான் ஆளாவேன். எனவே எனக்கு எதுவும் வேண்டாம். நீ போகலாம் என்று சொல்லிவிட்டாள். 

ஆனால், தேவதை தன் சாபத்தை சொல்லி, விடாமல் கெஞ்சிக் கொண்டே இருந்தது. அதனால், எழிலி சற்று மனமிரங்கி... சரி தேவதையே, எங்களுக்குப் பொன்னோ, பொருளோ தேவையில்லை. எப்போதும் உழைத்து வாழ வேண்டும் என்ற உறுதியையும், எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தையும் மறந்து போகாமல் இருக்கும்படியான வரம் தர முடியுமா? என்று கேட்டாள்.

தேவதையும் மகிழ்ந்து அப்படியே தருகிறேன். அதனுடன் இத்தனை வறுமையிலும் எதற்கும் ஆசைப்படாத உனக்கும், உன் தாய்க்கும் நோயற்ற வாழ்வோடு நீண்ட ஆயுளையும் தருகிறேன் என்று சொல்லி மோதிரத்திற்குள் மறைந்தது. 

அன்று மாலை எழிலியின் தாய் வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் நடந்தவற்றை ஒன்றுவிடாமல் எழிலி கூறினாள். மகள் கூறியதை கேட்டதும் மகளைக் கட்டியணைத்து, முத்தமிட்டுப் பாராட்டினார். பின்பு, இந்த மோதிரம் நம்மிடம் இருந்தால், ஏதேனும் ஒரு சமயத்தில் இதை உபயோகப்படுத்தி பலன் பெறலாம் என்ற எண்ணம் நமக்குத் தோன்றக்கூடும்.

உழைக்காமல் பெறும் எந்த உதவியும் நமக்குப் பலன் தராது. அடுத்து வரும் தலைமுறையினருக்கும் உழைப்பின் உயர்வு புரிய வேண்டும். எனவே இந்த மோதிரத்தை நாம் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறி அதைப் பாழடைந்த கிணறு ஒன்றில் எழிலியின் அம்மா வீசி விட்டார்.

Sunday, 18 March 2018

யார் அழகு? போட்டி போடும் நான்கு நண்பர்கள்.! அழகுராணி.!

ஓரிடத்தில் எலி, முயல், குரங்கு, வெட்டுக்கிளி ஆகியவை ஒன்றுடன் ஒன்று நட்புடன் பழகி வந்தன. ஆனாலும் அவைகளுக்குள் அழகு குறித்து அடிக்கடி விவாதங்கள் எழும். ஒவ்வொன்றும் தன் பெருமையைப் பறைசாற்றும் விதத்தில் பேசும். முயல் மட்டும் மௌனமாக இருக்கும். குரங்கு நம் நால்வரில் நான் தான் மிக அழகு! மனிதர்கள் கூட எங்கள் இனத்திலிருந்துதான் தோன்றியதாக சொல்வார்கள்! என்று குதித்துக்கொண்டே கூறியது.

எலி நாங்கள் மனிதர்களின் வீட்டுக்குள்ளே புத்திசாலித்தனமாக ஒளிந்து வாழ்கிறோம்! எங்களிடம் அழகும், அறிவும் இருக்கிறது. எனவே நான்தான் அழகு தேவதை! என்று கூறியது. வெட்டுக்கிளி மனிதர்கள் திட்டும் போது குரங்கு முகம், எலி முகம் என்று கூட உங்களைப் பற்றிக் கூறுவார்கள்! நான் சிறிய உருவமாக இருந்தாலும் கிளியின் நிறத்தில் அழகாக இருக்கிறேன்! என்று பெருமிதம் பொங்கக் கூறியது.

நான் இந்த அழகுப் போட்டிக்கே வரவில்லை! என்று முயல் சொல்ல, மூன்றும் சேர்ந்து சிரித்தன. முயல் மெதுவாக அவ்விடத்தை விட்டு அகன்றது. என்ன இருந்தாலும் முயல் ஓடி வரும் அழகே தனிதான்! என குரங்கு சொல்லியது. அதற்கு எலி நிறமும் அழகும் மட்டும் இருந்தால் போதுமா? அறிவு, புத்திசாலித்தனம் எல்லாம் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அழகியாக ஏற்றுக்கொள்ள முடியும் என்று கூறியது.

வெட்டுக்கிளி எனக்கொரு யோசனை தோன்றுகிறது! நமக்குள்ளே ஓர் அழகிப் போட்டி நடத்தினால் என்ன? எனக் கேட்டது. போட்டி நடத்தலாம், ஆனால் நடுவர் யார்? என்று எலி சந்தேகம் எழுப்பியது. அப்போது நடுவராக நானிருக்கிறேன்! என திடீரென்று ஒரு சப்தம் கேட்டது. அனைத்தும் மேலே பார்க்க, மரத்தின் மீது ஒரு காகம் இருந்தது. நீங்கள் எப்படி? என்று குரங்கு ஆச்சரியத்துடன் கேட்டது.

அதற்கு காகம் நீங்கள் மூவரும் பேசிக் கொண்டிருந்ததை நான் கேட்டேன். முயலையும் அழைத்துக் கொண்டு நாளை என் இருப்பிடம் வாருங்கள். ஆனால் நான் தேர்ந்தெடுப்பவரை அழகு ராணியாக அனைவரும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ள வேண்டும்! என்று கூறியது. அனைத்தும் சேர்ந்து சரி என்று குரல் கொடுத்தன.

மறுநாள் அனைவரும் காகத்தை தேடி போய்க் கொண்டு இருந்தன. அப்பொழுது குருவி ஒன்று வலியால் துடித்துக் கொண்டிருந்தது. எனக்கு யாராவது ஒருவர் உதவி செய்யுங்களேன். ஒரு சிறுவன் கல்லெடுத்து எறிந்து என் காலில் காயப்படுத்தி விட்டான்! என குருவி உதவி கேட்டது.

குரங்கு நாங்கள் அழகிப் போட்டிக்குப் போய்க் கொண்டு இருக்கிறோம். இப்படி அபசகுனமாக பேசாதே! என்று கடுமையாக கூறியது. குருவியைப் பார்த்த எலியும், வெட்டுக்கிளியும் முகத்தை திருப்பிக்கொண்டு சென்று விட்டன. ஆனால் முயல் மட்டும் அவசர அவசரமாக மருந்து தேடி எடுத்து குருவியின் காலுக்கு போட்டு விட்டு பிறகு அழகிப்போட்டிக்கு சென்றது.

அழகிப் போட்டி தொடங்கியது, குறித்த நேரத்திற்கு முயல் மட்டும் செல்லவில்லை. மீதி மூன்றும் மனதிற்குள் மகிழ்ந்தன. அழகுக்கும் அறிவுக்கும் மதிப்பெண் போட்டு விட்டேன். இனி உங்கள் நல்ல குணம் பார்த்து மதிப்பெண்கள் கொடுப்பேன்! இதற்குத்தான் அதிக மதிப்பெண்கள் ஒதுக்கி இருக்கிறேன்! என காகம் கூறியதும் குருவிக்கு உதவாத மூன்றும் ஒன்றையொன்று பார்த்துக் கொண்டன. அப்பொழுது அரக்கப் பரக்க முயல் ஓடி வந்தது.

முயல் வந்ததும் காகம் முயல் தான் அழகு ராணி! இதை அழகுராணியாகத் தேர்வு செய்வதற்காக நான் பெருமைப்படுகிறேன்! குருவி என் நண்பன்தான்! ஒரு ஆபத்திலிருந்து முயல் காப்பாற்றியதாக சற்று முன்பு தான் குருவி என்னிடம் கூறியது. அப்பொழுது நீங்கள் மூவரும் உதவாமல் சென்றது பற்றியும் சொல்லி வருத்தப்பட்டது! உதவும் நல்ல மனம் உள்ளவர்கள்தான் உண்மையில் அழகானவர்கள்! என காகம் கூறியதும் எலி, வெட்டுக்கிளி, குரங்கு ஆகியவை வெட்கத்தில் தலைகுனிந்தன.


நீதி : நாம் யாருக்காவது உதவி செய்தால் அது ஒருநாள் நமக்கு எதிர்பாராத பயனைத்தரும்.